Annamalai on Vilathikulam Arrest | ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? அண்ணாமலை ஆவேசம்!

மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி ஒருவரை போலீஸார் கைது செய்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முக்கிய கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் மார்ச் 10-ம் தேதி இயற்கை உபாதைக்காக தனது வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி, அடுத்த நாள் காலையில் உடல் துண்டு துண்டாக சடலமாக மீட்கப்பட்டார்.

விசாரணையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளியைக் கைதுசெய்யும் வரையில் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 10 நாள்களாக தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடிவந்த போலீஸார், சிசிடிவி காட்சிகள் மற்றும் டி.என்.ஏ சோதனை மூலம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், பாஜக முன்னால மாநில தலைவர் அண்ணாமலை, இந்தக் கைது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்களின் கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரைக் கைது செய்திருப்பதாக, திமுக அரசின் காவல்துறை அறிவித்திருக்கிறது.

ஆனால், இதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு, தூத்துக்குடி எட்டயபுரம் அருகே, 65 வயது முதிர்ந்த பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கி கொலை செய்த வழக்கில், கடந்த 2022 ஆம் ஆண்டு, சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

வழக்கு முடிவில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், அந்த வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும், தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஒரு வயதான பெண்மணியை, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிக் கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு அந்த வழக்கை மெத்தனமாகக் கையாண்டிருக்கிறது.

மறுபக்கம், பல வழக்குகள் கொண்ட ஒரு சரித்திரப் பதிவேடு குற்றவாளி, ஜாமீனில் வெளிவரும்போது, அவனைத் தொடர்ந்து கண்காணிக்காமல் தமிழகக் காவல்துறை இருந்திருக்கிறது. 

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தக் குற்றவாளியைப் பிடித்ததாகக் கூறும் காவல்துறை, சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே. 

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு பொதுமக்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை பதிவிட்டிருக்கிறார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola