Smartphone | காஸ்ட்லி போன் வாங்கிய கணவன் - தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி மனைவி

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். 32 வயதான இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சூர்யா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

மேலும் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் ரூபாய் 16 ஆயிரத்திற்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அறிந்த சூரியா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் சூர்யாவை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து சூர்யா தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலம்பரசன் சூர்யா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு குத்தாலம் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

சூர்யா தற்கொலைக்கு செல்போன் பிரச்னை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூர்யா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்பத் தகராறில் நிறைமாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram