Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

40  வருடங்களுக்கு மேலாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யானையை பார்த்து பாகன் கதறி அழும் காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில். இந்தக் கோவிலுக்கு 1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் காந்திமதி என்ற யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும்.

காந்திமதி யானைக்கு 56 வயதாகும் நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாத காலமாக யானை காந்திமதி படுக்காமல் நின்றவாறே தூங்கி, அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தது. 

நேற்று அதிகாலை காந்திமதி யானை படுத்து தூங்கிய நிலையில், மீண்டும் அதனால் எழ முடியவில்லை. இதனால் உடனடியாக அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து யானை காந்திமதிக்கு பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டன. இதனையடுத்து கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி இன்று மரணமடைந்தது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையின் இறப்பை தாங்க முடியாமல் பாகன் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola