மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
யூடியூபில் பணம் மற்றும் தங்க நகைகள் நிறைய இருப்பதை வீடியோவாகப் பதிவிட்டு வந்த பிரபல யூடியூபர் மதுமிதா மீது போலீஸார் திருட்டு வழக்கு பதிவுசெய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக்குவனம் பகுதியில் விஐபி கார்டனில் வசித்து வருபவர் மதுமிதா. பிரபல யூட்யூபரான இவர் தனது சேனலில் 500 ரூபாய் பணக்கட்டுகளை தன் மீதும், தன் குழந்தை மீதும் அள்ளி வீசுவது போலவும், தனது வீட்டில் தங்கம், வைர நகைகள் அதிக அளவில் இருப்பது போலவும் தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி அவரது வீட்டில் புகுந்த திருடர்கள், 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தனது வாக்குமூலத்தில், மதுமிதாவின் வீடியோக்களைப் பின் தொடர்ந்து கொள்ளை கொள்ளையடித்ததாகத் தெரிவித்திருந்தார்கள். இப்படியிருந்தும், இந்த திருட்டு சம்பவத்திற்குப் பின்னர் மீண்டும் பண கட்டுக்களை வைத்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார் மதுமிதா. இதனால், மதுமிதாவின் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் மதுமிதா மீது தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜாக்கமங்கலம் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். FIR தகவலின்படி, மதுமிதா தன்னை ஒரு பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி கோவை, திருநெல்வேலி நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பாக்களில் வேலை பார்த்துள்ளார்.
திருநெல்வேலியில் உள்ள ஸ்பாவில் வேலை பார்த்தபோது அங்கு மசாஜ் செய்ய வந்த 89 வயது தொழிலதிபர் ஒருவரிடம் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். ஒரு நாள் தொழிலதிபரை செல்போனில் அழைத்த அவர் தன்னை காரில் அழைத்து செல்ல கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காரில் அழைத்துச் சென்றபோது காரில் வைத்து அவருக்கு மசாஜ் செய்துள்ளார். அப்போது அவரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். மேலும், இதுபற்றி ஏதாவது புகார் செய்தால் அசிங்கப்படுத்தி விடுவதாக கூறி அவரை மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அவர் இதுவரை புகார் கொடுக்காத நிலையில், நேற்று ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.