Police Training : இலவசமாக காவல்துறை பயிற்சி 300 நபர்களை போலீஸ் ஆக்கிய SI யார் இந்த சதீஷ்குமார்?
இலவசமாக காவல்துறை பயிற்சி 300 நபர்களை போலீஸ் ஆக்கிய SI யார் இந்த சதீஷ்குமார்?
தன்னைப் போல் பிறரும் சிரமப் படக் கூடாது என்பதற்காக இலவச பயிற்சி கொடுத்து 9 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல் துறையில் சேர காரணமாக இருந்து அசத்தியுள்ளார் காவல் உதவி ஆய்வாளர்.
திருவாரூர் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் வரதராஜன் அம்சவள்ளி தம்பதியினரின் இரண்டாவது மகன் 32 வயதான சதிஷ் குமார். வரதராஜன் நோய்வாய்ப்பட்டு வீட்டில் உள்ள நிலையில் தாய் அம்சவள்ளி அரசுப் பள்ளியில் சத்துணவு கூட சமையலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2012-13ம் ஆண்டில் சதிஷ் குமார் சீருடை பணியாளர் தேர்வு எழுதி இரண்டாம் நிலை காவலராக திருவாரூரில் பணியாற்றி வந்தார். காவலராக பணியாற்றிக் கொண்டே 2017ல் மீண்டும் நேரடியாக காவல் உதவி ஆய்வாளர் தேர்வை எழுதி வெற்றி பெற்றார்.
அதன் மூலம் திருவாரூர் மாவட்ட தடயவியல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்து தானாகவே படித்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ள சதீஷ்குமார் தன்னை போன்று காவல் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்களுக்கு உதவ முடிவெடுத்தார். தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டிலிருந்து சீருடை பணியாளர் தேர்வுக்கு பயிற்சி கொடுத்ததில் முதல் தேர்விலேயே ஐந்து பேர் எழுதியதில் மூன்று பேர் தேர்ச்சி பெற்றனர்.
தொடர்ந்து இலவசமாக காவலர்,சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ரயில்வே காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தேர்வுக்கு பயிற்சி அளிப்பதை அறிந்து ஆர்வமுள்ள இளைஞர்கள் பலரும் சதீஷ் குமாரை அணுகியுள்ளனர். இவரும் நண்பர்களும் சேர்ந்து பயிற்சி அளித்ததன் பலனாக கடந்த 9 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல் உதவி ஆய்வாளர் தீயணைப்புத்துறை காவல்துறை போன்ற போட்டி தேர்வில் சாதித்துள்ளனர்.