TVK Vijay | ரொம்ப தப்பா போய்டும்கரூர் போங்க விஜய்!கடுப்பான தவெக தொண்டர்கள்
கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று சந்திக்க இருந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026-ல் சட்டமன்ற தேர்தல் தமிழ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில் விசாரணையும் நடைபெற்று வருகிறது. மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையும் கடந்த சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை கரூருக்கே நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில் தான் அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உயிரிழந்த குடும்பத்தில் இருந்து தலா 3 முதல் 4 பேரை பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூற விஜய் திட்டம் தீட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த குடும்பத்தினர் அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகே சந்திப்பதற்கான நேரம், தேதி இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தவெக தரப்பு கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களை கரூரில் சந்திக்க தகுந்த இடம் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக சொல்கின்றனர். அண்மையில் தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்தில் அழைத்து விஜய் சந்தித்து இருந்தார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் தற்போது கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூரில் அழைத்து ஆறுதல் சொல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் அப்படி ஒரு திட்டம் இருந்தால் தயவு செய்து அதை மாற்றிவிடுங்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தான் சரியாக இருக்கும் என்றும் விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.