Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசுக்கு ரூ.187.56 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொண்டு வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தகவலின் படி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக, தவெக அரசு ஒரு கிலோ துவரம் பருப்பை ₹77.89 என்ற விலையில் தவெக அரசு கொள்முதல் செய்துள்ளது. இது கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட விலையை விட கிலோவுக்கு சுமார் ₹31 குறைவாகும். இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மாநில அரசுக்கு ₹187.56 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு 60,000 டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தவெக அரசு ₹467.34 கோடி செலவிட்டுள்ளது. ஆனால், இதே அளவு, தரம் மற்றும் விவரக்குறிப்புகள் கொண்ட துவரம் பருப்பைக் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு ஜூலை முதல் திமுக அரசு மூன்று மாதங்களுக்கு ₹654.9 கோடி செலவிட்டு வந்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அடுத்த மூன்று டெண்டர்களிலும் (அடுத்த 9 மாதங்களுக்கு) இதே விலையில் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்தால், அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ₹750 கோடி வரை மிச்சமாகும்.
சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையிலும், பருப்பு விலையில் பெரிய மாற்றம் இல்லாத சூழலிலும், கொள்முதல் செலவு இவ்வளவு தூரம் குறைந்திருப்பது, கடந்த ஆட்சியில் அதிக விலை கொடுத்துப் பருப்பு வாங்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
திமுக ஆட்சியில் கடைசி டெண்டர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது மே 2 அன்று இறுதி செய்யப்பட்டது. இந்தச் சரக்குகள் ஆகஸ்ட் இறுதி வரை விநியோகிக்கப்பட்டன. மாதம் தோறும் 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ரேஷன் காரார்தாரர்களுக்குக் கிலோ ₹30 என்ற மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதில் 86% முதல் 88% கார்டுதாரர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றனர்.
செப்டம்பர் முதல் விநியோகம் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 6 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய பணி ஆணைகளின்படி, ஒரு கிலோவிற்கு சராசரியாக ₹77.89 வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு மற்றும் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்பட்ட முதல் டெண்டர் ஆவணங்களிலும் இந்த விலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு ஜூலை முதல் வழங்கப்பட்ட ரேஷன் ரசீதுகளின் படி, திமுக ஆட்சியில் கிலோ ₹109.15-க்கு கொள்முதல் செய்யப்பட்டது தெளிவாகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநரான ஷில்பா பிரபாகர் சதீஷ் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி அனைத்து டெண்டர் விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.187 கோடி மிச்சமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் டெண்டரில் அதிகமான விநியோகஸ்தர்கள் பங்கேற்றதால் இந்த விலை மாற்றம் நடைபெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் உலகச் சந்தைகளில் நிலவும் அதிக பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டின் உயர்வைக் கருத்தில் கொண்டு வழக்கமாக ஒவ்வொரு கொள்முதலின்போதும் விலை உயர்வு தான் இருக்கும். மாறாக 29 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய விலை விரைவில் ரேஷன் ரசீதுகளில் பிரதிபலிக்கும் என்றும், நுகர்வோரே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொள்முதல் விலையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விலை குறைப்புக்கு மிக முக்கிய காரணம் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனன் செயல்பாடு என்று சொல்லப்படுகிறது, எந்த வித கமிஷனும் வாங்காமல் நேர்மையான முறையில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் தற்போது துவரம் பருப்பானது குறைந்து விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















