Thanjavur Temple: இந்து கோவில் குடமுழுக்கு! சீர்கொடுத்த இஸ்லாமியர்கள்! “இனம் என பிரிந்தது போதும்”
தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் பங்கேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அருகே அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் இந்த கோயிலும் ஒன்று.
இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். இதற்காக முதல் நாள் நள்ளிரவு முதலே பக்தர்கள் நடந்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இங்குள்ள மூலவரான அம்மன் புற்றுமாரியம்மன் ஆகும். இந்த அம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் மட்டும் நடைபெறும்.
இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மும்முரமாக நடந்தது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கையொட்டி கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடந்தது. குடமுழுக்கையொட்டி புன்னைல்லூர் மாரியம்மன்கோயிலில் உள்ள கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி நடந்தது. இதில் அம்மன் கோபுரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்பட்டது. இந்த கலசம் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தது. இதே போன்று துர்க்கை அம்மன், பேச்சியம்மன் கோபுரத்திலும் புதிதாக கலசங்கள் பொருத்தப்பட்டன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் பாலீஷ் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்பட்டன.
இதேபோல் கோயிலில் உள்ள கொடிமரத்திலும் செப்புக்கவசம் பொருத்தப்ப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அப்போது வடவாற்றில் இருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்காக பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. விழா முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 6 மணிக்கு 6ம் கால யாகசாலை தொடங்கியது. பின்னர் பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ராதானம் ஆகியவை நிறைவடைந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டது.
இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திரளான இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து பங்கேற்றனர். கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக மத ரீதியிலான சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இந்த கோவில் குடமுழுக்கு விழாவில் இஸ்லாமியர்கள் சீர்வரிசையுடன் வந்து கலந்துப் கொண்ட சம்பம் இது தமிழ் நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.