Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. அதிமுகவில் இருந்து விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகில் இணைந்தனர். மேலும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்த காரணத்தால் அந்த தொகுதியிலும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இரண்டு மாத காலத்திற்குள் தமிழகம் மீண்டும் 7 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தொகுதி MLA-க்களின் வெற்றியை எதிர்த்து போடப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள போது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு. இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது என வாதிட்டார்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராயவேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.-க்கள் பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















