Anti CAA Resolution: CAA எதிர்ப்பு - பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஸ்டாலின்!
Anti CAA Resolution: இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரும் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என்றும், அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுப்டுத்திப் பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் உள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதலமமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் ஆகும்.
இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம் சட்டப்படியான பாதுகாப்பை அரசு மறுக்கமுடியாது. சட்டத்திருத்தம் மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்யும். சிஏஏ குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது.
பேரவையில் இருந்து பாஜகவின் நான்கு உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டமில்லை என்றும், வேற்றுமையில் ஒற்றுமை கடைப்பிடிக்கும் நாடு இந்தியா எனவும் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த நிலையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் மத்திய அரசு சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அச்சட்டத்திற்கு எதிர் கட்சியாக திமுக இருந்த போது, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சிஏஏ அமல்படுத்தப்படாது என சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்து இருந்தார்.
மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியிலும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், தேர்தல் வாக்குறுதியின் படி அச்சட்டத்தை இரத்து செய்யக் கோரி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.