Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
உதயநிதி ஸ்டாலினும் சூரியும் ஒன்றாக இருக்கும் வீடியோவை டேக் செய்து அடுத்த படம் தவெக மீறி எப்படி ரிலீஸ் செய்யப் போறாரோ? என வம்பிழுத்த நெட்டிசனுக்கு படத்தின் வெற்றியை பணமும் அரசியலும் தீர்மானிக்காது என பதிலடி கொடுத்துள்ளார் சூரி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக நடிகர் சூரியும் நேரில் வந்திருந்தார். அப்போது உதயநிதிக்கு சால்வை அணிவித்து காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார் சூரி. அதேபோல் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள சூரியும் காளையும் வெற்றி பெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூரி, ஜல்லிக்கட்டு கலாச்சாரம் குறையக்கூடிய சூழல் வந்தது, தற்போது மீண்டும் எழுச்சி பெற்று சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
உதயநிதிக்கு சூரி பரிசு கொடுத்ததை வைத்து அவரை திமுகவுடன் இணைத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்தன. தவெகவுக்கு எதிராக உதயநிதியுடன் சூரி கைகோர்ப்பதாக விமர்சனம் எழுந்தது. தவெகவை மீறி அடுத்த படம் எப்படி ரிலீஸ் செய்யப் போகிறாரோ என நெட்டிசன் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இதனை பார்த்து கடுப்பான சூரி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடட்பான அவரது பதிவில், ‘தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான். கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King. அதை தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல; அதை பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும்; இல்லன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது. அதுதான் நியாயம். அதுதான் உண்மை” என தெரிவித்துள்ளார்.