
Sivagangai : பெண் SI மீது தாக்குதல் ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?” ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகி
காரைக்குடி அருகே விசிக மாவட்ட நிர்வாகி தாக்கியதாக கையில் காயத்துடன் பெண் எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் நிலையத்திலேயே எஸ்.ஐ யாக பணி புரியும் பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லையே என தாய் கதறி அழுதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. இரவு காவல் நிலையத்தில் கோவில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குறிய புகார் மனு தொடர்பாக விசாரனைக்கு வந்தவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலர் வந்திருந்தனர்.
பெண் எஸ்ஐயிடம் புகார் மனு தொடர்பாக கேட்ட போது நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் நான் வேறு காவல் நிலையத்திற்கு பணியிடை மாறுதல் செய்யப்படுள்ளேன் என்று கூறிய நிலையில் எஸ்.ஐ யிடம் விசிக மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் உள்ளிட்டோர் தகராறு செய்துள்ளனர். மேலும் பெண் எஸ்.ஐ என்று பாராமல் ஆபாசமாக பேசி இதற்கு காக்கி சட்டையை கழட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. தகராறு செய்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெண் எஸ்ஐ பிரணிதா காயமடைந்து மயங்கி காவல்நிலையத்தில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் மீட்டு பெண் எஸ்.ஐ சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெண் எஸ்.ஐ பிரணிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ.யான தனது மகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்க தாய் கூறினார். காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பெண் எஸ்.ஐ யை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தால் காரைக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது