
Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?
டீ குடிப்பதற்காக இரயில் இருந்து இறங்கிய ஒருவர்..20 ஆண்டுகளாக கொத்தடிமை வாழ்க்கை வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை மீட்ட அரசு அதிகாரிகள் குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விஜயநகரம் அருகேவுள்ளது மனியம் மாவட்டம், பார்வதிபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கிஷா என்பவரது மகன் அப்பாராவ் என்கிற கொண்டக்காரி சுக்கா. இவருக்கு சீத்தாம்மா என்கிற பெண்ணுடன் திருமணமாகி தம்புதோரா சாயம்மா என்கிற பெண் குழந்தையும் இருந்துள்ளது.
கட்டிட தொழிலாளியான அப்பாராவ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஒரு கட்டிட பணிக்காக சென்னை வழியாக ரயில் மூலம் சென்றுள்ளார். அச்சமயம் சென்னை ரயில் நிலையத்தில் டீ க்குடிப்பதற்காக இறங்கியவர் பாண்டிச்சேரி செல்லும் ரயிலை தவறவிட்டதுடன் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் மாறுதலாக ஏறி பயணித்துள்ளார்.
செல்லும் ஊர் தெரியாமல் சிவகங்கை ரயில் நிலையத்தில் இறங்கி நின்றவரை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள கடம்பங்குளம் கிராமத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் இவரை பார்த்து வேலை தருவதாக கூறி அழைத்து சென்று ஆடுகளை மேய்க்கவைத்துள்ளார். அழைத்து சென்ற மூன்று ஆண்டுகளில் மலைக்கண்ணு இறந்துவிடவே அதனை தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் இவரை அழைத்து சென்று அதேபோல் ஆடுமேய்க்க வைத்துள்ளார்.மேலும் கடந்த 17 ஆண்டுகளாக அப்பாராவிற்கு ஊதியம் எதுவும் வழங்காமல் வெறும் உணவு மட்டுமே வழங்கியதுடன் அப்பாராவ் ஊருக்கு செல்ல அனுமதி கேட்டும் வழங்காமல் ஊதியத்தை அப்பாராவின் ஊதியத்தை வங்கியில் செலுத்தி வருவதாகவும் கூறி கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கை தொழிலாளர் நலத்துறை அலுவலர் முத்து தலைமையிலான குழுவினர் தொழிலாளர் தினத்தன்று காளையார்கோவில் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பாராவ் குறித்து தெரியவரவே உடனடியாக மீட்டு அவரிடம் விசாரனை மேற்கொண்டதோடு ஆட்சியர் ஆஷா அஜித்திடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர் ஆந்திரா மாநிலம் மன்யம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அப்பாராவ் குறித்த தகவலை தெரிவித்து அவரது குடும்பத்தினரை தேட உதவிகோரவே உடனடியாக அங்கிருந்த அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை தேடியுள்ளனர்.
மூன்று வார தேடுதலுக்கு பின் அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்துவிட்ட நிலையில் அவரது மகள் தம்புதோரா சாயம்மாளுக்கு தம்புதோரா சந்து என்பவருடன் திருமணமாகி இருந்த நிலையில் மகள் சாயம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரிகளே அப்பாராவின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரை அழைத்து சிவகங்கை வந்ததுடன் அப்பாராவை குடும்பத்தினருடன் சேர்த்தனர். கொத்தடிமையா இருந்தவரை மீட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது.