Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுக-வையும், போலீஸையும் விஜய் குற்றம்சாட்டிய நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் முதலமைச்சர் விஜய் இன்று முதல்முறையாக கரூருக்குச் சென்றார்.
மேலும், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலைக்கானபணி நியமன ஆணையை வழங்கினார்.அதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விஜய், அன்று போலீஸ் போட்ட நாடகத்தை நம்பி ஏமாந்துவிட்டதாகவும், திமுக தன் மீது பழிபோட்டு அரசியல் ஆதாயம் தேடினார்கள் என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமல்லாமல், கரூர் கம்பெனி ஓனர் ஓடிவிட்டதாக செந்தில்பாலாஜியையும் விமர்சித்தார்.மேலும், கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.இந்த நிலையில் செந்தில் பாலாஜி, விஜய்யின் விமர்சனத்துக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அந்தப் பதிவில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும், அன்றைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என்று விமர்சித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















