‘Poovai’ Jagan Moorthy | ”கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்” குவியும் புகார்கள்! பூவை ஜெகன் மூர்த்தி கைது?

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறை அவரை தேடிவரும் சூழலில், அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசாரிடம் புகார் அளித்து வருவதாகவும், புகார்களின் அடிப்படையில் பூவை ஜெகன் மூர்த்தி மீது மேலும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரது மகன் தனுஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து, அந்த பெண் வீட்டார் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் தந்தை வனராஜ், புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த பூவை ஜெகன் மூர்த்தியிடம் தன் பெண்ணை தனுஷிடமிருந்து மீட்டு தருமாறு கோரியுள்ளார். இதனையடுத்து போலீஸ் உயரதிகாரி ஒருவரின் உதவியுடன் பூவை ஜெகன் மூர்த்தி தன்னுடைய ஆட்களை அனுப்பி தனுஷினி தம்பியான 17 வயது சிறுவனை காரில் கடத்திச் சென்று வைத்துக்கொண்டு, அந்த பெண்ணை அவரது தந்தையுடன் அனுப்ப வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

காதல் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தனுஷின் தாய் திருவள்ளூர் எஸ்.பி.அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, இதில் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன் மூர்த்திக்கு பங்கு இருப்பதை கண்டறிந்து அவரை விசாரிக்க முடிவு செய்தது. ஆனால், அவர் நேற்று தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் கைது செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட பலர் திருவள்ளூர் மாவட்டம் உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்த புகார்களின் அடிப்படையில் பூவை ஜெகன் மூர்த்தி மீது மேலும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ என்பதால் அவர் தரப்பால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் மீது புகார் அளிக்க பயந்து வந்த நிலையில், ஜெகன் மூர்திக்கு எதிரான காவல் துறையின் கைது நடவடிக்கை அவர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்,  திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நில பிரச்னை, மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாகவும், அவருடைய ஆட்களும் அவரின் பெயரை சொல்லி இன்னும் சிலரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்”சொல்கின்றனர். ஆனால், ஜெகன் மூர்த்தி தரப்போ, அதிமுக கூட்டணியில் புதிய பாரதம் கட்சி அங்கம் வகிப்பதால், திமுக அரசு போலீசை வைத்து மிரட்டப் பார்ப்பதாகவும், பட்டியலின மக்களின் எழுச்சிக்காக பாடுபடும் அவருக்கு எதிராக சதி வலைபின்னப்பட்டு வருவதாகவும் கவலையுடன் கூறி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola