O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
அதிமுகவில் மீண்டும் தன்னை இணைக்கவில்லை என்றால் புது கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் ஓபிஎஸ் இருப்பதாக சொல்கின்றனர்.
அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தொண்டர் மீட்பு குழு என்ற ஒரு அமைப்பு உருவாக்கி செயல்பட்டு வருகிறார். அதற்கு நிர்வாகிகளையும் அடுத்தடுத்து நியமித்து வருகிறார். இச்சூழலில் தான் ஆளும் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்ற பிரச்சாரத்தையும், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. விஜயின் தவெகவும் ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓபிஎஸ் சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
அவர் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்று அவர் தரப்பு நிர்வாகிகள் விரும்பினாலும் அதிமுக தலைமை தற்போது வரை அதற்கு செவிசாய்க்கவில்லை. பாஜகவும் அதிமுகவுடன் ஓபிஎஸை இணைக்க பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும் இபிஎஸ் இன்னும் முரண்டு பிடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு என்ன செய்வது என்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது பற்றியும் நெருங்கிய வட்டாரத்தில் பேசுவருவதாக சொல்லப்படுகிறது.
இச்சூழலில் அதிமுகவில் தன்னை மீண்டும் இணைக்கவில்லை என்றால் தனிக்கட்சி தொடங்கிவிடாலம் என்று ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள ஓபிஎஸ் அந்த மேடையிலேயே புதிய கட்சியை அறிவிப்பார் என்றும் சொல்கின்றனர் ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவர்கள். அதே நேரம் தேசிய ஜன நாயக கூட்டணியில் தனது தரப்பு ஆதரவாளர்களுக்கு சீட் கேட்கவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.