இந்த அரசும் எங்களை வஞ்சிக்குதுலஞ்ச ஊழலுக்கு தள்ளுறாங்கவருவாய்த்துறையினர் போராட்டம்
ஆளும் அரசும், அரசு நிர்வாகமும் தங்களை லஞ்ச ஊழலுக்கு தள்ளுவதாக நாமக்கல்லில் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த் துறை அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய சுயநலத்துக்காக ஒரு வேலையை செய்யச் சொன்னால் செய்ய முடியாது என்று முழக்கமிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், "பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ள 'தீர்வு' செயலியை செயல்படுத்த மாட்டோம், அரசு நிகழ்வுகளுக்கான செலவுகளை ஏற்க மாட்டோம், இரவு 10 மணி வரை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தும் நடைமுறையை கைவிட வேண்டும், வருவாய்த் துறையில் பாரபட்சமான பணியிட மாறுதல்களை ரத்து செய்து, வெளிப்படையான மற்றும் நேர்மையான முறையில் பணியிட மாற்றம் மேற்கொள்ள வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
குறிப்பாக, "அமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று யாராவது கேட்கிறார்களா" என்று கேள்வியெழுப்பிய வருவாய்த்துறை அதிகாரிகள், ஆளும் அரசும் அரசு நிர்வாகமும் தங்களை லஞ்ச ஊழலுக்கு தள்ளுவதாகவும், எந்த அரசு வந்தாலும் அரசு ஊழியர்களை வஞ்சிப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், வருவாய்த் துறையினரின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை அவர்கள் தற்காலிகமாகக் கைவிட்டனர்.