Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
கோவையில் தவெக எம் எல் ஏவுக்கு மாலை அணிவிக்கும் விவகாரத்தில் சூலூர் தவெக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் தவெக பெண் நிர்வாகி ஒருவரின் ஆடை கிழிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சுகுமாரை வரவேற்க இரு பிரிவினரும் தனித்தனியாக திரண்டு நின்றிருந்ததாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ. ஒரு தரப்பினரை மட்டும் சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றதாக கூறப்படும் நிலையில், மற்றொரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலின்போது, தவெக பெண் நிர்வாகி வசந்தி தாக்கப்பட்டதாகவும், அவரது ஆடை கிழிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காயமடைந்த வசந்தி, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட தகவலின்படி, எம்.எல்.ஏ.வுக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதிலேயே தகராறு உருவாகி, பின்னர் அது வன்முறையாக மாறியதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் போலீசார் விளக்கம் பெற்று வருவதாகவும், கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் உள்கட்சி மோதல் பொதுமக்கள் முன்னிலையிலேயே வன்முறையாக வெடித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.