Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்
கொடைக்கானலில் கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால், அதனை கடக்க முடியாமல் சிக்கிய தாயையும், குழந்தையையும் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதுமாகவே பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளங்கி கோம்பை அருகில் இருக்கக்கூடிய மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது .மூங்கில் காடு கிராமத்திற்கு இந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
இதனால் அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் அவதியடைந்தனர். உடல்நலம் சரியில்லாதவர்கள் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மூங்கில் காடு பகுதிக்கு விரைந்த அரசு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
மேலும் தாய் ஒருவர் காய்ச்சலுடன் ஆற்றை கடக்க முடியாமல் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். உடனடியாக களத்தில் இறங்கிய தீயணைப்பு துறையினர் காட்டாற்று வெள்ளத்திற்கு நடுவே ஐந்து மணி நேரத்திற்கு பிறகு கயிறு கட்டி இருவரையும் மீட்டனர்.
மேலும் மூங்கில் காட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் தேவை எனில் உடனடியாக செய்து தரப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களின் பாதுகாப்புக்காக ஆற்றின் வேகத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.