அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம் கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்

Continues below advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் வசிக்கும் வீடுகளை ஆக்கிரமிப்பு என ஜே.சி.பி-யுடன் இடிக்க வந்த அதிகாரிகளிடம், வீடுகளை இடிக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திம்மாபுரம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில், இந்திரா காந்தியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 1985-ல் 36 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அன்று முதல் கடந்த 40 ஆண்டுகளாக அந்த வீடுகளில் தலைமுறை தலைமுறையாக அவர்கள் வசித்து வருகின்றனர்.

மேலும் அவர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் மின் இணைப்பு பெற்று மின் கட்டணமும் செலுத்தி வந்துள்ளனர்.

அதேவேளையில் அப்பகுதி மக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு நீண்ட நாள்களாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒருவர், அரசின் சார்பில் இந்திரா காந்தி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகள் உள்ள இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மானிய நிலம் என்றும், அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றிட வேண்டும் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளார்.

அதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் மானிய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு முறையான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகாரிகள் ஜே.சி.பி-யுடன் வீடுகளை இடிக்க வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

மேலும், சிறுவர்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் அதிகாரிகளிடத்தில், வீடுகளை இடிக்க வேண்டாம் எனக் கூறி கதறி அழுதனர். அப்போது பெண்மணி ஒருவர் அங்கேயே மங்கி விழுந்தார்.

தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தங்களுக்கு மாற்று இடம் எதுவும் வழங்காமல் வீடுகளை இடிக்க வருவது எந்த விதத்தில் நியாயம் என்று அவர்கள் கேள்வியெழுப்பினர்.

இதனைக் கேட்ட அதிகாரிகள், 10 நாள்கள் அவகாசம் தருவதாகவும், அதற்குள் வீடுகளை அகற்றிட ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மேலும், அப்பகுதி பெண்கள், "நாங்களே அன்றாடம் கூலியாக இருக்கும் நிலையில் வீடுகளை இடித்து அகற்றினால் நாங்கள் எங்கே போவது.

நாங்கள் பலமுறை பட்டா கேட்டு அதிகாரியிடம் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எங்களுக்கு பட்டா வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola