Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர் புகார்
கிண்டி மருத்துவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக ‘’டாக்டர் பாலாஜி தவறாக சிகிச்சை அளித்ததாக நான் அவர்களிடம் கூறவே இல்லை’’ என தெரிவித்து விக்னேஷின் தாய் ப்ரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் டியூட்டியில் இருந்த புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விக்னேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார். தனது தாய்க்கு தவறான சிகிச்சை அளித்ததால் இவ்வாறு செய்ததாக விக்னேஷ் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விக்னேஷின் தாய் பிரேமா தனக்கு டாக்டர் பாலாஜி தவறான சிகிச்சை அளித்ததாக தனியார் மருத்துவர் தெரிவித்ததாகவும், தனது தாயின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாவதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் தனது மகன் இவ்வாறு செய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் விக்னேஷின் தாய் பிரேமா மற்றும் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோஸஸ் புகார் அளித்துள்ளார். டாக்டர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நான் கூறியதாக அவர்கள் கூறுகின்றனர் அதில் உண்மையில்லை. என் மீது அவதூறு பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ஜேக்கலின் மோசஸ் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் பிரேமா மூன்று முறை நுரையீரல் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் தனது அறிவுறுத்தலின் பேரில் தான் பிரேமா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் விக்னேஷ் தரப்பில் மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவரின் இந்த புகார் இந்த வழக்கில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.