KP Anbalagan Raid: வருமானத்தை விட ரூ.11,32,95,755 சொத்துகுவித்த கே.பி அன்பழகன்! FIR சொல்வது என்ன?
KP Anbalagan Raid: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி.அன்பழகன் தொடர்புடைய தருமபுரி, சென்னை உள்ளிட்ட 57 இடங்களில் 100க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வருமானத்தை விட கூடுதலா 11 கோடியே 32 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் மீது நேற்று வழக்கு பதியப்பட்ட நிலையில், இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கேபி அன்பழகன் மட்டுமல்லாமல் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேரின்மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டும் 6வது அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன். ஏற்கனவே, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சொத்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அதிமுக ஆட்சியில் 2 முறை அமைச்சராகவும் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று தற்போதும் அந்த தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார் கே.பி.அன்பழகன். சோதனையின் முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறை கொடுக்கும் அறிக்கையிலேயே அவருக்கு சொந்தமான இடங்களில் என்னவெல்லாம் கைப்பற்றது என்பது தெரியவரும்.