Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி மேடையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் கொடுத்து அங்கீகரித்துள்ளதால் அன்புமணி தரப்பினர் குஷியில் இருக்கின்றனர். கட்சியும், சின்னமும் எங்களுக்கு தான் என விடாமல் போராடி வந்த ராமதாஸ் தரப்பினர் அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர்.

அன்புமணியிடம் இருந்து தலைவர் பதவியை பறிப்பதாக அறிவித்த ராமதாஸ் அவரை கட்சியில் இருந்தும் நீக்கினார். ஆனால் பொதுக்குழுபடி தனக்கு தான் அதிகாரம் இருப்பதாகவும், தலைவராக தொடர்வதாகவும் பதிலடி கொடுத்தார் அன்புமணி. அவரது தலைமையில் நடந்த பொதுக்குழுவில் அன்புமணியே 2026 ஆகஸ்ட் வரை தலைவராக தொடர்வார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதெல்லாம் செல்லுபடியாகாது என ராமதாஸ் தரப்பினர் போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், அன்புமணி தலைமையிலான பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன்மூலம் கட்சியும், சின்னமும் அன்புமணி தரப்பிடம் தான் இருக்கிறது.

ஆனால் ராமதாஸ் மட்டும் தான் தலைவர், மாம்பழ சின்னம் ராமதாஸ்-க்கு தான் சொந்தம் என ராமதாஸ் தரப்பினர் முட்டிமோதி வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவிடம் இருந்து ராமதாஸ் தரப்புக்கு மெசேஜ் ஒன்று சென்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாக நடைபெறக்கூடிய மிக முக்கிய பொதுக்கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அமமுக டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மாம்பழம் சின்னம் தங்களுக்காக தான் என ராமதாஸ் தரப்பு தெரிவித்து வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மேடையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனரில் மாம்பழம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களுக்கு அடுத்ததாக அன்புமணி ராமதாஸின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கூட்டணியின் அதிமுக மற்றும் பாஜகவிற்கு அடுத்த கட்சியாக பாமக பார்க்கப்படுவதை இது காட்டுகிறது.

கட்சியும், சின்னமும் தங்களுக்கு தான் என சொல்லி வந்த ராமதாஸ் தரப்பினர் தற்போது விரக்தியில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola