AK Viswanathan IPS : சென்னையின் லூசிஃபர்!போலீஸின் மூன்றாவது கண்! ஏ.கே.வி IPS

Continues below advertisement

அடுத்த பிறவி ஒன்று இருக்குமானால் நான் மீண்டும் காக்கிச் சீருடை அணிந்த காவல் துறை அதிகாரியாக பணிபுரிய விரும்புகிறேன் என்று சொல்லி 34 ஆண்டுகள் காவல்துறை பயணத்தை நிறைவு செய்தார் Mr Third eye ஏ.கே.விஸ்வநாதன். 

ஈரோட்டை சேர்ந்த ஏ.கே.விஸ்வநாதன் மூன்றாவது தலைமுறை காவல்துறை அதிகாரி. இவரது தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் தலைமை காவலராகவும், இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்தவர்கள். இப்படி காவல்துறை பின்னணியில் வளர்ந்த ஏ.கே.விஸ்வநாதன் 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக காவல்துறையில் சேர்ந்து ஏஎஸ்பியாக பதவியை தொடங்கினார். பின்னர் மதுரை எஸ்.பி, சென்னை மாநகர கூடுதல் கமிஷனர், கோவை மாநகர கமிஷனர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஏடிஜிபி, ஊர்க்காவல்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த விஸ்வநாதன் 34 ஆண்டுகள் பயணத்தை நிறைவு செய்து பணி ஓய்வு பெற்றுள்ளார்.

அதிரடியான பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தான் வேலை பார்த்த இடங்களில் எல்லாம் மாற்றங்களை கொண்டு வந்தவர். எவ்வளவு சிக்கலான கேஸாக இருந்தாலும் கூலாக ஈஸியாக அதையெல்லாம் முடித்துவிடுவார் என்று கொண்டாடுகின்றனர் சக காவலர்கள். கோயம்புத்தூரில் அவர் அடியெடுத்து வைத்ததும், நீண்ட காலமாக முடிக்காமல் இருந்த குற்றவழக்குகளையெல்லாம் அடுத்தடுத்து முடித்து காட்டியுள்ளார். அவர் கோவை கமிஷனராக இருந்த போது சுமார் 90 சதவீதம் நிலுவை வழக்குகளை முடித்ததாக சொல்கின்றனர்.

அதுவும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் குற்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டியுள்ளன. அதில் முக்கியமானது மூன்றாவது கண். சென்னை முழுவதும் 2.7 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தி குற்ற சம்பவங்கள் நடப்பதை கட்டுக்குள் கொண்டு வந்தார். சாலை விதி மீறல்களை குறைப்பதற்கும் இந்த சிசிடிவி கேமராக்கள் முக்கியமானதாக இருக்கின்றன. 

போக்குவரத்தில் காவல்துறையில் பணமில்லா அபராதம் வசூலிக்கும் இ சலான் முறை கொண்டு வந்தது மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. காவலன் செயலி மூலம் பெண்களுக்கு எதிராக நடக்கக் கூடிய குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுத்தார். இந்த செயலி மூலம் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வர முடிந்ததாக பாரட்டப்பட்டது. சீன அதிபர் சென்னைக்கு வந்த போது இவர் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய அரசாலும் பாராட்டப்பட்டது. 


சென்னையில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் குற்ற நடவடிக்கை உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடித்து சொன்னார். பிரபல ரவுடிகளை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சிசிடிவி கேமராக்கள் மற்றும் ரவுடிகள் மீதான நடவடிக்கைகளால் சென்னையில் நிலைமை மாறியது.

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன் என பாராட்டுகின்றனர். மதுரையில் சிறுவன் ஒருவர் போக்குவரத்தை சரிசெய்வதை கவனித்துள்ளார். பின்னர் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்து சிகிச்சைக்கு உதவியுள்ளார். மேலும் காவல்ர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துள்ளார். கொரோனா காலத்தில் காவலர்களுக்கு முககவசங்களை காவலரே தயாரிப்பது, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு ஊக்கம் அளிப்பது என அவர் செய்தவற்றை தற்போதும் பாராட்டுகின்றனர். மேலும் காவலர்களுக்கு பூஸ்ட் கொடுப்பது போல் பணிகளை பாராட்டி பரிசும் கொடுத்துள்ளார்.

அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கினார். 90களில் தேவர் ஜெயந்தி விழாவின் போது லத்தி சார்ஜ் நடத்தியது, 2009ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலில் பங்கேற்றார் என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இறுதியில் அந்த ஊழல் வழக்கு கைவிடப்பட்டது. 

காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏ.கே.விஸ்வநாதனுக்கு நல்ல பெயர் இருக்கிறது. தனது பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் சிறப்பாக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் பணிஓய்வு பெற்றுள்ளார். அவரது பணிகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என காவல்துறையினர் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram