C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

Continues below advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திமுகவில் இணையவிருப்பதாகவும் அவருக்கு உடனடியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுத்தோல்வியை தழுவிய நிலையில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார் சி.விஜயபாஸ்கர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தும் சட்டப்பேரவையில் வாக்களித்தார். இதனால், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கி, புதிய மாவட்ட செயலாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கடும் அதிருப்தியடைந்த விஜயபாஸ்கர் அப்போதே வேறு கட்சியில் இணைய திட்டமிட்டார்.

குறிப்பாக, அதிமுக சீனியர்கள் பலரும் தவெகவில் சேர்ந்துள்ள நிலையில், அந்த கட்சிக்கு செல்லலாமா என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாக கருத்துக் கேட்டுவந்தார். தவெக சென்றால் உரிய மரியாதை கிடைக்காது என்றும் கொள்கை ரீதியாக செயல்பட வேறு ஒரு பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்றும் விஜயபாஸ்கருக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைந்து பயணிப்பது தொடர்பாகவும் விஜயபாஸ்கர் ஆலோசித்துள்ளார். நேரடியாக அண்ணாமலைக்கு வாழ்த்துச் சொல்லி அவரிடமே இது குறித்து விஜயபாஸ்கர் பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அண்ணாமலை இன்னும் தன்னுடைய இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றத சூழலிலும் இயக்கத்திற்கு பெயர் சூட்டாத நிலையிலும் அவருடம் இப்போதே இணைந்து பயணிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக தன்னுடைய தனிப்பட்ட நலம்விரும்பிகள் தெரிவித்ததையடுத்து அந்த திட்டமும் கைவிடப்பட்டிருக்கிறது.

இறுதியாக தாய் கழகமான திமுகவிற்கே சென்றுவிடலாம் என்ற முடிவை எடுத்து, திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். இதையறிந்த புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி அதிர்ச்சிக்குள்ளாகி, விஜயபாஸ்கருக்கு எதிராக பிரஸ்மீட் கொடுத்திருந்தார். விஜயபாஸ்கர் திமுகவிற்குள் வந்தால் தன்னுடைய பிடிப்பு மாவட்டத்தில் விட்டுவிடும் என்ற அச்சத்தில் விஜயபாஸ்கர் திமுகவில் இணைய முயற்சிப்பதை தடுக்க ரகுபதி பல வழிகளில் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், விஜயபாஸ்கரின் புத்திக் கூர்மை, கள எதார்த்ததை அறிந்து அவர் செயல்படும் விதம், அவருக்கு மாவட்டத்தில் இருக்கும் செல்வாக்கு இவற்றையெல்லாம் கணக்கிட்டு திமுகவில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நபர் ஒருவர் விஜயபாஸ்கர் வருகை திமுகவிற்கு கூடுதல் பலமாகதான் இருக்கும் என்று கணக்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனடிப்படையில் விஜயபாஸ்கர் திமுகவில் இணைவது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்ப்பு தெரிவித்த ரகுபதியிடமும் திமுக தலைவர் வீட்டில் இருந்தே நேரடியாக பேசப்பட்டுவிட்டதாகவும், அவருடைய முக்கியத்துவம் குறைக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்னும் இரண்டு நாளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சி.விஜயபாஸ்கர் அண்ணா அறிவாலயம் வந்து திமுகவில் தன்னுடைய ஆதரவாளர்களோடு இணையும் விழா நடைபெறவிருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியில் இணைந்ததும் அவருக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola