Admk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?

அதிமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இனி அதிமுக கூட்டணியில் இருந்தால் நமக்கான முக்கியத்துவம் இருக்காது என்று திமுக கூட்டணியில் இணைவதற்கான வேலைகளை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இப்போது கட்சிகள் தொடங்கிவிட்டன. குறிப்பாக கூட்டணி தொடர்பான திட்டங்கள் தீட்டும் முனைப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. யார் எந்த கூட்டணியில் இணைவார்கள் யார் கூட்டணியை விட்டு வெளியேறுவார்கள் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஒரு புறம் திமுக தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததின் பின்னணியின் கூட்டணி கணக்குகள் தான் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

அதன்படி அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதேபோல், பாமகவும் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும் அப்படி இணைந்தால் அவர்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் அதிமுக கொடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு அதிமுக பிரிந்து சென்ற போது பாஜகவுடன் இணையாமல் அதிமுக கூட்டணிக்கு சென்றவர்கள் நாங்கள் , இப்போது எங்களுக்கே கூட்டணியில் மரியாதை கிடையாதா? என்று கடுகடுக்கின்றார்களாம் தேமுதிக நிர்வாகிகள்....

இதனால் கூட்டணியை மாற்றும் முடிவில் பிரேமலதா இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பிரேமலதா திமுக அரசின் பட்ஜெட்டை வரவேற்றார்.. தொகுதிமறுவரையறைக்கு எதிரான திமுக அரசின் நிலைபாட்டையும் வரவேற்றார்.

அதேபோல் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்னையில் செயின் பறிப்பு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை உடனடியாக கைது செய்த காவல் துறையை வரவேற்கிறேன்” என்று கூறியிருந்தார். இதன்மூலம் தமிழ் நாடு அரசை அவர் பாராட்டியுள்ளதாக கூறும் அரசியல் விமர்சகர்கள் திமுக கூட்டணியில் இணைவதற்கான முதல் படி தான் இது என்று கூறுகிறார்கள்... 

பாமக அதிமுக கூட்டணிக்கு சென்றால் அவர்களுக்கு அதிகமான சீட் கிடைக்கும் நமக்கான முக்கியத்துவம் அங்கு இருக்காது என்பதற்காக திமுக கூட்டணியில் இணைய தூது விடுகிறாராம் பிரேமலதா.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola