ABP Nadu Survey | கொரோனாவை எப்படி கையாண்டார் ஸ்டாலின்? மக்கள் என்ன சொல்கிறார்கள் ?
கொரோனா நெருக்கடியை மு.க ஸ்டாலின் தலைமையின் கீழ் திறம்பட கையாண்டது. நெருக்கடியை முன்கூட்டியே சுதாரித்த அவர், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அயராது முனைப்போடு செயல்பட்டார். ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், சட்டமன்ற கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது.நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த குழு அளித்த பல்வேறு ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.
மேலும், பொது முடக்கநிலை அமல் காலத்தில், கொரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.4000 மற்றும் 14 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை குடும்ப அட்டைத் தாரர்களுக்கு வழங்கினார்.
தேவை அதிகரிப்பால், கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் இருந்தன. அப்படியே படுக்கைகள் இருந்தாலும், அதை பற்றிய நிகழ்நேர தகவல்கள் தேவைப்படுவோருக்கு உடனடியாக கிடைப்பதில்லை. எனவே, படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் விநியோகம் குறித்த நிலவரங்களை ஆன்லைன் மூலம் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழக அரசு ஒருங்கினைந்த கட்டளை மையத்தை (UCC War Room) உருவாக்கியது. இந்த மையம் அனைத்து மாவட்டங்களிலும் பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாகுறையை போக்க ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்ள உமாநாத் ஐஏஎஸ், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், கே.நந்தகுமார் ஐஏஎஸ், தாமரை கண்ணன் ஐபிஎஸ், பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்தனர். தமிழ்நாடு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் தவிர்க்கப்பட்டது. இவரின், ஆட்சிக் காலத்தில் தான் மாவட்ட அளிவில் மேற்கொள்ளப்படும் தினசரி கொரோனா பரிசோதனை குறித்த விவரங்கள் வெளியாகத் தொடங்கியது.