Story of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?
3 முறை புதுடெல்லி தொகுதியை கைப்பற்றி, 2 முறை முதல்வராக அரியணை ஏறிய அர்விந்த் கெஜ்ரிவாலை தண்ணீ குடிக்க வைத்துள்ளார் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங்.. இந்நிலையில் தோல்வியே சந்திக்காத அர்விந்த் கெஜ்ரிவாலை முதல் முறையாக வீழ்த்தி முடிசூடியுள்ள பர்வேஷ் சிங், அடுத்த டெல்லி முதல்வராக வருவதற்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளதால், அவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
2020ம் ஆண்டு கெஜ்ரிவாள் ஒரு தீவிரவாதி என்று சொன்ன காரணத்திற்காக, ஒரு எம்பியை 24 மணி நேரம் தடை செய்தது தேர்தல் ஆணையம். அந்த எம்பி வேறுயாருமில்லை பர்வேஷ் சாகிப் சிங் தான்.
இவர் தான் தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தலில், கெஜ்ரிவாலை நீக்குங்கள்.. நாட்டை காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்தை அனைத்து பாஜக தலைவர்களின் குரலை காட்டியும், வீரியமாக முழங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
டெல்லியின் முன்னாள் முதல்வர், பாஜகவின் மூத்த தலைவரான சாகிப் சிங் வெர்மாவின் மகன் தான் இந்த பர்வெஷ். பர்வேஷின் சித்தப்பா அசாத் சிங், வடக்கு டெல்லியின் மேயராக இருந்தவர். இப்படி பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் 1977ல் பிறந்தார் பர்வேஷ் சாகிப் சிங்...
டெல்லி பப்லிக் ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்த பர்வேஷ், இளநிலை பட்டத்தை டெல்லி பல்களைகழகத்திலும், MBA பட்ட படிப்பை FORE SCHOOL MANAGEMENTல் பயின்று முடித்தார்.
இந்நிலையில் அரசியலில் சீனுக்குள் இவர் எண்ட்ரி கொடுத்தது, 2013 டெல்லி சட்டமன்ற தேர்தலில் தான். மெஹ்ரவுளி தொகுதியில் போட்டியிட்ட பர்வேஷ் முதல் தேர்தலிலேயே வெற்றியை பதிவு செய்தார்.
ஆனால் அத்துடன் நிற்காத இவர், 2014 மக்களவை தேர்தலில், மேற்கு டெல்லி தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டு அதிலும் வெற்றி அடைந்தார், குறிப்பாக 2019 தேர்தலில் ஏறக்குறைய 6 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் இவர் பெற்ற வெற்றி, டெல்லியில் உள்ள பாஜகவின் முக்கிய தலைகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் தான் கெஜ்ரிவாலின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுத நினைத்த பாஜக, அவரை 2024 மக்களவை தேர்தலில் களமிறக்காமல், FOCUS-ஐ சட்டமன்ற தேர்தல் பக்கமாக திருப்புமாறு அறிவுறித்தியது. அதை போலவே கெஜ்ரிவாலுக்கு எதிராக 2025 தேர்தலில் பர்வேஷை களமிறக்கியது பாஜக. தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய பர்வேஷ் “கெஜ்ரிவாளை நீக்குங்கள்.. டெல்லியை காப்பாற்றுங்கள்.. என்ற முழக்கத்தை சத்தமாக முன்வைத்தார்”..
மேலும் டெல்லியில் நிலவிய கடுமையான சுற்று சூழல் மாசு, நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள், பெண்களுக்கான பாதுகாப்பு, டெல்லியின் வளர்ச்சி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பர்வேஷ். குறிப்பாக யமுனை நதியை சுத்தபடுத்துவோம் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி என்ன ஆனது? ஏன் தூய்மைபடுத்தவில்லை என்ற பர்வேஷின் கேள்வி மக்கள் மத்தியில் பெரிய அளவில் எடுப்பட்டது..
கெஜ்ரிவாலை தீவிரவாதி என குறிப்பிட்டது தொடங்கி, அதிரடியாக கருத்துகளை பேசுவது தான் பர்வேஷின் ஸ்டைல்.
இந்நிலையில் இது அனைத்தையுமே டெல்லி மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. 3 முறை தொடர் வெற்றி பெற்று, 2 முறை டெல்லியின் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அவருடைய சொந்த தொகுதியான புது டெல்லியில் தோற்கடித்து டெல்லி சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளார் பர்வேஷ் சாகிப் சிங்.
டெல்லியின் பெரும்பான்மை சமூகமான ஜாட் சமுதாயத்தை சேர்ந்தவர் பர்வேஷ் என்பதால், அடுத்த டெல்லி முதல்வராகும் வாய்ப்பும் இவருக்கு பிரகாசமாக இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் பார்வையாளார்கள். இந்நிலையில் 10 ஆண்டுகளாக ஆட்சி கட்டிலில் இருந்த கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பியுள்ளார் பர்வேஷ் சாகிப் சிங்.