Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து அதிரடி காட்டியுள்ளது.
யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கர் கடந்த திமுக அரசுக்கு எதிராகவும், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனையடுத்து அப்போதைய அரசுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வந்ததாக கூறி சவுக்கு சங்கர் கடந்த திமுக ஆட்சி காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர், உடல் நலப்பிரச்சனையை காரணம் காட்டி 12 வாரங்கள் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்தார். பின்னர் தொடர் சிகிச்சைக்காக சவுக்கு சங்கர் மீதான ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதி வரை ஜாமீனை நீடித்தது.
இதனால் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் திடீரென சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆந்திராவில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அடுத்தாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. இதனால் ஓராண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலையானது நீடித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கடந்த திமுக ஆட்சி்யில் இருந்த அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் கரூர் சம்பவத்தின் போது தவெக மீது வழக்கு பதிவு செய்த போலீசாரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை என குறிப்பிட்டு சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் விஜய் தரப்பில் இருந்து சில நாட்களுக்கு முன் அதிகாரிகளுக்கு முக்கிய ஆர்டர் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. அதில் கடந்த ஆட்சியில் யூடிபர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக மறுஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான், தற்போது சவுக்கு சங்கர் வழக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ச்சியாக அடுத்தடுத்த யூடியூபர்களின் வழக்குகளில் அதிரடி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.