Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
திமுகவின் பலமான தொகுதியாக மாறிவரும் புதுக்கோட்டை தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.ஏ. மாவட்டச் செயலாளர், எம்.பி என திமுகவில் பலரும் போட்டி போட்டு வருவதால் முதல்வர் ஸ்டாலின் யாரைத் தேர்வு செய்யப்போகிறார் என்பது இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் சில நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே தீயாய் பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட தலைநகரான புதுக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக திமுக யாரை நிறுத்தப்போகிறது என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது.
2.24 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த புதுக்கோட்டைத் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ-வாக திமுகவை சேர்ந்த மருத்துவர் முத்துராஜா இருந்துவருகிறார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட தீவிரமாக அவர் காய்நகர்த்தி வருகிறார். அதேசமயம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்த பிறகு, இம்முறை தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயலாற்றி வருகிறார்.
இதற்கிடையில், புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி புதுக்கோட்டையில் வாய்ப்பு கேட்டு தலைமையை அணுகியிருக்கிறார். ஆனால், மாவட்டச் செயலாளராக இருக்கும் நீங்கள் விராலிமலையில் போட்டியிடவேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறது கட்சித் தலைமை.அந்தத் தொகுதியில் பலமாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதால், செல்லப்பாண்டி இப்போதே அந்த பகுதியில் கட் அவுட், பேனர் என தன்னை முன்னிலைப்படுத்த தொடங்கியிருக்கிறார்.
அதேபோல், ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கும் எம்.எம். அப்துல்லாவும் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். ஆனால், புதுக்கோட்டை மாநகர செயலாளர் விவாகரத்தில் அவரின் செயல்பாடுகளால் உட்கட்சியில் வெடித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாமல் புகைந்துகொண்டிருக்கிறன. அதனால் அப்துல்லாவிற்கு கட்சித் தலைமை சீட் தருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதே நேரத்தில், புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ டாக்டர் முத்துராஜா மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒருநாள்கூட தவறாமல் கலந்துகொண்டதாகப் பேரவையிலேயே பாராட்டப்பட்ட 8 எம் எல்.ஏ-க்களில் முத்துராஜாவும் ஒருவர் என்பதால் முதல்வரின் கவனமும் பாராட்டும் அவருக்கு சாதகமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, புதுக்கோட்டை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியது, யார் கல்வி உதவி என்று வந்து கேட்டாலும் தட்டமால் தன் சொந்த நிதியில் இருந்தே செய்து தருவது, நகரில் விடுபட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை முடிக்க முயற்சி எடுத்தது, கடந்த 30 வருடமாகப் புதுக்கோட்டை மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியது என புதுக்கோட்டை தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் முத்துராஜா.
மேலும், பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் போராடி வந்த 4 குடும்பங்களுக்கு மேல் பட்டா பெற்றுக்கொடுத்திருப்பது அவருக்கு பெரிய மைலேஜாக இருக்கிறது.இதுமட்டுமின்றி, புதுக்கோட்டையில் மருத்துவ கல்லூரி வந்த பின்னர் முற்றிலுமாக செயல்படாமல் முடங்கிக் கிடந்த டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனையை மீண்டும் செயல்பட வைத்ததன் மூலம் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள். இது முத்துராஜாவுக்கு பெரிய பிளஸ்ஸாக மாறியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், எம்.எல்.ஏ ஆவதற்கு முன் தான் பார்த்துக்கொண்டிருந்த அரசு மருத்துவர் பணியை ராஜினாமா முத்துராஜா செய்திருந்தாலும், இப்போதும் மாலையில் தொகுதி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவது என தொகுதி மக்களிடையே தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்.இதனடிப்படையில் பார்த்தால், தற்போதைய நிலையில் தொகுதி மக்களிடம் முத்துராஜா தனக்கென தனியொரு மக்கள் செல்வாக்கை உருவாக்கியிருப்பதால் அவருக்கே மீண்டும் திமுகவில் சீட் உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.