Prisoners Ramayana | சிறையில் ராமாயண நாடகம்! சீதையை தேடுவது போல் எஸ்கேப்! கம்பி நீட்டிய வானர கைதிகள்
உத்தரகாண்ட் சிறையில் நடந்த ராமாயண நாடகத்தில் வானர வேடமிட்ட கைதிகள், சீதையை தேடுவது போல் நடித்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள சிறையில், ராமாயணம் நாடகம் நடத்தப்பட்டது. அதில் சிறைக்கைதிகளே, ராமன், லட்சுமனன், ஹனுமன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களாக வேடமணிந்து தத்ரூபமாக நடித்து அசத்தினர். அதில் சில கைதிகள் அனுமனின் வானர சேனையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு நடித்தனர். ராமாயண நாடகத்தை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ரசித்துக் கொண்டிருந்த போதுதான் கைதிகள் அதிர வைக்கும் ஒரு சம்பவத்தை செய்துள்ளனர்.
வானர வேடத்தில் இருந்த 2 கைதிகள் சீதையை தேடும் காட்சியில் நடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சீதையை தேடுவது போல் காட்சிக்கு வெளியே சென்றுள்ளனர். அவர்கள் தத்ரூபமாக நடிப்பதாக காவலர்களும் சிறை அதிகாரிகளும் நினைத்துள்ளனர். ஆனால் போனவர்கள் திரும்பி வராததால் தேடிய போது தான் அவர்கள் சிறையில் இருந்து தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சிறையில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், அதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை பயன்படுத்தி தப்பித்து சென்றுள்ளனர். கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையிலிருந்த பங்கஜ் என்பவரும், ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த ராஜ்குமார் என்பவரும் நாடகத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிக்க ஸ்கெட்ச் போட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.