Annamalai Minister post : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்
அண்ணாமலை அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அவருக்கு அமைச்சரவை பதவி மறுக்கப்பட்டது. ஆனால் அண்ணாமலையை அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவில் சிலரது விருப்பமாக உள்ளது. அண்ணாமலையை அமைச்சராக்கததன் பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அதனை தொடர்ந்து மேலும் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் எல்.முருகனை தவிர மற்றவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருந்தாலும், தமிழ்நாடு அரசியலில் ஆக்டிவ்வாக இல்லாதவர்கள் என்பதால் தமிழ்நாடு சார்பாக முக்கிய அமைச்சர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய முக்கிய மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் பாஜக இந்த முறை மக்களவை தேர்தலில் களமிறங்கியது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சில தொகுதிகளில் அதிமுகவையும் பின்னுக்கு தள்ளி பாஜக 2ம் இடத்தை பிடித்தது. மேலும் வாக்கு சதவீதம் 11.24 சதவீதமாக உயர்ந்தது. இதையெல்லாம் வைத்து பாஜக மாநில தலைவராக இருக்கக் கூடிய அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் அண்ணாமலை தேர்தலில் தோற்றதால், அவரை அமைச்சராக்கி மாநிலங்களவை எம்.பி ஆக்குவதில் பாஜகவுக்கு சிக்கல் இருக்கும் என்பதால் அந்த முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் தேர்தலில் தோற்றுவிட்டதால் அண்ணாமலையே தனக்கு பதவி வேண்டாம் என்று சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜகவை வளர்ப்பதில் அண்ணாமலை முக்கிய பங்கு வகிப்பதால் முழுமையாக அவருக்கு அந்த பொறுப்பை கொடுக்கலாம் என தலைமை நினைத்துள்ளது. மேலும் தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக உட்கட்சி மோதலும் இருக்கிறது. சொந்த கட்சியினரே அதிருப்தியில் இருப்பதால் அண்ணாமலைக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கும் அளவுக்கு ஆதரவுக் குரல் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பது அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. வருங்காலத்தில் அவருக்கு பதவி கொடுப்பது பற்றி தலைமை முடிவெடுக்கும் என சொல்கின்றனர். அண்ணாமலைக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் கூறியுள்ளார்.