TN Next Governor : அடுத்த ஆளுநர் யார்? காய் நகர்த்தும் பாஜக! ரவியை அழைத்த அமித்ஷா
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் வரும் 31ஆம் தேதியோடு முடிவைடையவுள்ள நிலையில், அண்மையில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என் ரவி மோடி, அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்தார்.. இந்நிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை ஆளுங்கட்சியான திமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே எழுந்த முரண்பாட்டால், உச்சநீதிமன்றம் வரை தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி, சனாதானம், திருவள்ளுவர், தமிழ்நாடு உள்ளிட்டவைகள் குறித்தும் திராவிடம், திராவிடர்கள் பற்றியும் ஆளுநர் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகியின. அதற்கு திமுக நேரடியாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது, பல இடங்களில் கருப்புக் கொடி காட்டப்பட்டன. ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை கூட முதல்வரும் தமிழக அமைச்சர்களும் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
அதோடு, சட்டப்பேரவை கூட்டத் தொடரை தொடங்கி வைக்க வந்த ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமலும் தேசிய கீதம் இசைக்கப்படும் வரை அவையில் இருக்காமல் கிளம்பி போனாதெல்லாம் சமீபகால தமிழக அரசியலில் சூட்டை கிளப்பியது.
இந்நிலையில் தான் ஆளுநரின் பதவிகாலம் வரும் 31ஆம் தேதியோடு முடிவடைகிறது என அரசு தரப்பில் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் சத்தம் கேட்கிறது.
ஆனால், தன்னுடைய பதவி காலம் முடிவடைய இன்னும் சிறிது காலமே இருக்கும் சூழலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் செல்வாக்குள்ள அமைச்சர்களை டெல்லிக்கு சென்று நேரடியாக சந்தித்து பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி, இதனால், தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவது சந்தேகம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆர்.என்.ரவியையே மீண்டும் ஆளுநராக தொடர குடியரசுத் தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஆளுநர் ரவியே இன்னும் சில வருடங்களுக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான உத்தரவை விரைவில் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அம்மாநில ஆளுநர் பொறுப்பையும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் பதவியையும் கூடுதலாக ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனே கவனித்து வருகிறார். இந்நிலையில், இந்த இரண்டு மாநிலங்களும் புதிய ஆளுநர்களை விரைவில் குடியரசுத் தலைவர் நியமிக்கவுள்ளார்.
ஏற்கனவே, தமிழரான தமிழிசையே தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு ஆளுநராக இருந்த நிலையில், மீண்டும் ஒரு தமிழரையே தெலுங்காவிற்கு ஆளுநராக நியமிக்க மத்திய அரசு விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதனால் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக பாஜகவில் முக்கிய நபராகவும் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளராவும் இருந்த ஹெச்.ராஜா பெயரும் ஆளுநர் ரேசில் உள்ளதாக தெரிகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவரான பொன்.ராதாகிருஷ்ணன் நாடார் சமூகத்தை சேர்ந்தவர். ஏற்கனவே, தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகித்த தமிழிசையும் இதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த சமூகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கே இந்த வாய்ப்பு தாப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகே பொன்.ராதாகிருஷ்ணன் ஆளுநர் பதவியை எதிர்பார்த்து வந்தார். ஆனால், அவருக்கு பதில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசையும், சிபி ராதாகிருஷ்ணனும் பாஜக-வால் ஆளுநர் ஆக்கப்பட்டார்கள்.
புதுச்சேரியை பொறுத்தவரை தமிழர் அல்லாத வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரையே துணை நிலை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி போன்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியை ஆளுநராக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, கேரள ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கானின் பதவி காலமும் விரைவில் முடிவடைய இருக்கிறது. எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் விரைவில் குடியரசுத் தலைவரால் நியமினம் செய்யப்படவிருக்கின்றனர்.