Udhayanidhi stalin : துரைமுருகனா? உதயநிதியா? 17 நாட்கள் பொறுப்பு யாருக்கு? ஸ்டாலினின் ப்ளான்
முதலமைச்சர் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் வரை 17 நாட்கள் முதல்வர் பொறுப்பு துரைமுருகனுக்கா உதயநிதிக்கா என்று பேச்சு ஆரம்பமாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புகளை யார் கவனித்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க பயணத்திற்கு முன்பாகவே அமைச்சரவையில் மாற்றம் நடந்து உதயநிதி துணை முதல்வராவார் என்று பேசப்பட்டது. மற்றொரு பக்கம் அமைச்சர் துரைமுருகனின் பெயரும் அடிபட்டது. ஆனால் துணை முதல்வர் பொறுப்பு அறிவிக்கப்படாத நிலையில், ஆட்சி நிர்வாகத்தின் தற்காலிக தலைமையாக யார் செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற போது அவரது பொறுப்புகளை அவருடைய தனிச் செயலாளர்கள் எடுத்துச் செய்தனர். தற்போது மீண்டும் அமெரிக்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புகளை அவரது தனிச் செயலர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரை முன்நின்று எடுத்துச் செய்வார்களா? அல்லது துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் கைகளுக்கு அந்த பொறுப்பு செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் முதல்வர் தமிழ்நாட்டில் இல்லாத சூழலில் அவரின் பொறுப்புகளையும் கூடுதலாக ஏற்று உதயநிதி ஸ்டாலினே ஆட்சியை வழிநடத்துவார் என்று தெரிகிறது. முதல்வர் அமெரிக்காவிற்கு சென்றாலும் அவரிடம் நேரடியாக தொலைபேசி, வீடியோ மூலமாக அன்றாக தமிழக அரசின் நடவடிக்கைகள், முடிவுகளை கலந்தாலோசித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி உதயநிதி ஸ்டாலின் இந்த 17 நாட்களும் செயல்படவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது
அவருக்கு நிர்வாகத்தில் உதவ முதல்வரின் செயலர்களாக உள்ள சண்முகம், அனு ஜார்ஜ், தலைமைச் செயலாளர் முருகானாந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் துரைமுருகன், கே.என்.நேரு. ஏ.வ.வேலு உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் உதவியாக இருக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 17 நாட்களும் உதயநிதியே முதல்வராக செயல்படவுள்ளார் என்று திமுக தொண்டர்கள் பேசிவருகின்றனர். அவர் வரும் வரை ஆட்சியை எந்த பிரச்னையும் இன்றி அவர் சிறப்பாக நடத்திக்காட்டுவார் என்றும் முதல்வர் வந்த பிறகு உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு தரப்படுவது உறுதி என்கிறது அறிவாலய வட்டாரம்.