VK Pandian retires Politics : அரசியலுக்கு GOODBYE... கண்கலங்கிய V.K.பாண்டியன்! பின்னணி என்ன?

Continues below advertisement

ஒடிசா மாநிலத்தில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் வி.கே.பாண்டியன். பாஜகவினரின் தீவிர பிரச்சாரம், வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் சொன்னதற்கு மத்தியில் அரசியலில் இருந்து வி.கே.பாண்டியன் விலகியுள்ளது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது ஆளும் பிஜூ ஜனதா தளம். ஒடிசாவில் மொத்தமுள்ள 21 மக்களவை தொகுதிகளில் 20ஐ பாஜகவும், 1 தொகுதியை காங்கிரஸும் தட்டிச் சென்றன. அதேபோல் 147 சட்டசபை தொகுதிகளில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

பிரச்சாரத்தில் பிஜு ஜனதா தளத்தில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்து பவர்ஃபுல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியனுக்கு பாஜகவினர் குறிவைத்தனர். ஜெகநாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒடிசாவை தமிழர் ஆட்சி செய்யலாமா என்றும் மோடியும், அமித்ஷாவும் ரவுண்டு கட்டினர். நவீன் பட்நாயக்கை வி.கே.பாண்டியன் தான் இயக்குவதாகவும், அவரது அரசியல் வாரிசு என்றும் விமர்சனம் எழுந்தது.

பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனே காரணம் என்றும் கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்தது. இதுதொடர்பாக பேசிய நவீன் பட்நாயக், பாண்டியன் மீதான விமர்சனங்கள் துரதிருஷ்டவசமானது என்றும், தனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை என்றும் தெரிவித்தார். பிஜூ ஜனதா தளத்தின் அடுத்த தலைவரை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

இந்தநிலையில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார். தனது அரசியல் குருவான நவீன் பட்நாயக்கிற்கு உதவி செய்யவே பிஜூ தளதா தளத்திற்கு வந்ததாகவும் தனது பதவி ஆசையில்லை என்றும் கூறியுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய போது தன்னிடம் எவ்வளவு சொத்து இருந்ததோ அதே அளவு சொத்துதான் தற்போதும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் பேசிய அவர், ‘எனது அரசியல் பயணத்தில் நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு எதிரான பிரச்சாரம் பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மொத்தமாக பிஜூ ஜனதா தளத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டுள்ளார் வி.கே.பாண்டியன்.

வி.கே.பாண்டியனுக்கு எதிரான பிஜூ ஜனதா தளத்திற்குள்ளேயே பூகம்பத்தை கிளப்பிய நிலையில், அதற்கு முடிவுகட்டும் விதமாக வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram