Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள், ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று தொடங்கியது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் விவசாய அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தருமபுரி தொகுதிய்ல் போட்டியிட்டு சுமார் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாமக சார்பில் சி. அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் யார் போட்டியிட உள்ளார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி வன்னியர் சங்க நிர்வாகி மற்றும் பாமக மாநில துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் இவர் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட சி. அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார். அதாவது அந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 23.19 சதவிகித வாக்குகளை இவர் பெற்று இருந்தார். இந்நிலையில் தான் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட, சி. அன்புமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.