TVK Vijay : முதல் மாநாட்டில் சிக்கல்?விஜய் ப்ளான் நடக்குமா? பரபரக்கும் TVK
த.வெ.க.வின் முதல் மாநாட்டிற்கு ரெடியான விஜய் விக்கிரவாண்டியை டார்கெட் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநாடு நடத்த அனுமதி பெற மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அனுமதி வழங்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். இதற்காக, அவர் சற்று தீவிரம் காட்டி வருவதை செயல்களால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, தவெக கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவில்லை என்றாலும், `2026 சட்டப்பேரவைத் தேர்தலே எங்கள் இலக்கு' எனத் தெரிவித்து, நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வந்தனர். இத்தகைய சூழலில், அண்மையில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்தார், அந்தக் கட்சியின் தலைவர் விஜய். கட்சி பாடலும் வெளியிடப்பட்ட நிலையில், `கட்சிக் கொடி குறித்த விளக்கத்தையும், கட்சிக் கொள்கை உள்ளிட்டவை குறித்தும் விரைவில் மாநாட்டில் தெரிவிப்பேன்' என விஜய் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக தலைமையில் நடைபெற்று கொண்டிருந்தது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெற்ற நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் தாங்கள் தேர்வு செய்து தலைமைக்கு அனுப்பிய இடமே நிச்சயமாக தேர்வாகவுள்ளதாக எண்ணி மாநாடு விளம்பர போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களை அடித்து வைத்து, இடத்தை மட்டும் காலியாக விட்டு வைத்து தயார் நிலையில் உள்ளனர். தலைமையின் முறையான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதோடு, கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்தால், தலைவர் விஜய்யின் வெற்றிக்கு சென்டிமென்டாக இந்த மாவட்டம் அமைந்து விடும் என எண்ணி குஷியோடு காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே, வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வைத்து தான் நடைபெற இருக்கிறது. எனவே, மாநாடு நடத்த அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் என கேட்டு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலிடம் நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் 23ம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெற உள்ளனர். இந்த மனு மீதான பரிசீலனை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்த்து பரிசீலனை செய்த பிறகு தான் அனுமதி வழங்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என்பது தெரியவரும். அனுமதி கொடுக்கப்பட்டால் மாநாடு நடைபெறுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயே வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.