Vijay Trichy campaign | திருச்சியில் விஜய் பரப்புரை தவெகவிற்கு 23 நிபந்தனைகள்! காவல்துறை எச்சரிக்கை
தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ரோடு ஷோ நடத்தக்கூடாது, வரவேற்பு நிகழ்ச்சி வைக்கக்கூடாது என்பது உட்பட 23 நிபந்தனைகள் தமிழக காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பயணத்தை இப்போதே எல்லா கட்சிகளும் தொடங்கி விட்டன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளர். அதன்படி, செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் விஜய்.அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்குவதாக இருந்தது. காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்த நிலையில் திருச்சி மரக்கடை பகுதியில் நடத்த அனுமதி கொடுத்தது காவல் துறை. இந்த நிலையில் காவல்துறை சார்பில் 23 நிபந்தனைகளுடன் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் எந்த பகுதியிலும் ரோடு ஷோ நடத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விஜயின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும் என்றும் முன்னும் பின்னும் தவெகவினர் ஊர்வலமாக வரக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது தமிழக காவல்துறை. பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது.
இசைக்குழு பயன்படுத்தக்கூடாது. பிறர் மனம் புண்படும் வைகையிலோ, பிற ஜாதி மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மொத்தம் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற் காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.