”திரும்ப விசாரணை நடத்துங்க! குறையே இருக்க கூடாது”வேங்கைவயல்- விஜய் போர்க்கொடி

வேங்கை வயல் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்.

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேங்கை வயல் வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றவாளிகள் என சொல்லியுள்ளதற்கு விசிக தலைவர் திருமாவளவன் போர்க்கொடி தூக்கியுள்ளார். அதேபோல் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். 

இந்தநிலையில் வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்! ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

விஜய் பரந்தூரை தொடர்ந்து வேங்கைவயல் செல்லவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் வேங்கைவயல் விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola