Vijay Constituency | லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! 2 இடங்களில் விஜய் போட்டி? தயக்கத்தில் தவெக?

Continues below advertisement

முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய் 4 தொகுதிகளை லிஸ்ட்டில் வைத்துள்ளதாகவும் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கின்றனர். வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற தயக்கத்தில் தான் விஜய் 2 தொகுதிகளுக்கு குறிவைக்கிறாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 


புதிதாக கட்சி தொடங்கிய விஜய் முதல்முறையாக வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறார். எம்.ஜி.ஆர் மாதிரி அவர் முதலில் சந்திக்கும் தேர்தலிலேயே வெற்றியை தட்டிச் செல்வாரா என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விஜய் தீவிரமாக ஆய்வு செய்து 4 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்கின்றனர். சென்னையில் இரண்டு தொகுதிகள், திருச்சியில் ஒரு தொகுதி, வட மாவட்டத்தில் ஒரு தொகுதி என இறுதிச் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, விஜய் சென்னையில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் விஜயின் முதல் எழுத்தான V-யில் தொடங்கும் விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் விஜய் போட்டியிட நினைப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் இளைஞர்கள் வாக்குகள் அதிக அளவில் இருப்பதால் இதில் ஒன்றில் விஜய் வேட்பாளராக நிற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதுவும் வேளச்சேரியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்றும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக, கிறிஸ்துவர்கள் வாக்குகள் கொண்ட திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடும் திட்டத்தில் விஜய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிக்கோ இருதயராஜ் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், எம்.ஜி.ஆர் இரண்டாம் தலைநகராக அறிவிக்க நினைத்த திருச்சியையும் விஜய் குறி வைத்திருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதுமட்டுமின்றி, இரு தொகுதிகளில் விஜயை போட்டியிட சொல்லி சில முக்கிய பிரமுகர்கள் கூறியுள்ளதாகவும் அதனால் சென்னையில் ஒரு தொகுதி, திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் வேட்பாளராக நிறுத்த வியூக வகுப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டால் இன்னொரு தொகுதி கைகொடுக்கும் என்ற நினைப்பில் தான் நம்பிக்கை இல்லாமல் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாஜகவினர் விமர்சித்தனர். 2019 மக்களவை தேர்தலில் ராகுல்காந்திக்கு அமேதி தொகுதி கைவிரித்த நிலையில், வயநாடு தொகுதி வெற்றியை கொடுத்தது. அதேபோல் விஜய்யும் திமுக, அதிமுக என 2 பெரிய கட்சிகளை எதிர்த்து நிற்பதால் வெற்றி வாய்ப்பை இழந்து விடுவோமோ என்ற தயக்கத்தில் 2 தொகுதிகளுக்கு குறிவைப்பதாக எதிர் தரப்பினர் விமர்சிக்கின்றனர். 


அதே நேரத்தில் தவெகவுக்கு எங்கெங்கு வெற்றி வாய்ப்புகள் அதிக உள்ளன என எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில் பல தொகுதிகள் சாதகமாக வந்திருப்பதாகவும் அதிலும் சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் முடிவுகள் வந்திருப்பதாகவும் விஜய் தரப்பில் பேச்சு இருக்கிறது. செங்கல்பட்டு, விக்கிரவாண்டி உள்ளிட்ட தொகுதிகளிலும் விஜய் கட்சிக்கான ஆதரவு பெருகியிருப்பதாக சர்வே முடிவுகளில் தெரியவந்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola