VCK ADMK Alliance | ”வந்திடுங்க திருமா” தூதுவிடும் எடப்பாடி! பதற்றத்தில் திமுக?
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் திமுக- விசிக இடையே புகைச்சல் கிளம்பியிருப்பதாகவும், இதனை வைத்து விசிகவை அதிமுக பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் இபிஎஸ் இறங்கியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதற்காகவே அதிமுகவில் இருந்து ஒரு டீம் களமிறங்கியுள்ளதாம்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது. சட்டம், ஒழுங்கு சரியில்லை என திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை அடுக்கி வருகின்றனர். அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனே இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், இனியாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் காட்டமாக பேசினார் திருமா.
இதுமட்டும் கிடையாது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் போர்க்கொடி தூக்கினார் திருமா. விஷச் சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டணி கட்சியான விசிகவே ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுகவுக்கு சங்கடமான சூழலை உருவாக்கியது.
அதேபோல் விசிக நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் உரிய மரியாதை கொடுக்கவில்லை என அவர்களும் ஆரம்பத்தில் இருந்தே அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரங்களை பயன்படுத்தி விசிகவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் இபிஎஸ் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருமாவளவன் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போகிறார், விஜய்யுடன் இணையப் போகிறார் என கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. சில தலித் அமைப்புகள் திமுக- விசிக கூட்டணியை விரும்பாததாகவும், அவர்களை வைத்து விசிகவுக்கு அழுத்தம் கொடுத்து கூட்டணியில் இருந்து வெளியே வர வைப்பதற்கான வேலைகளில் அதிமுகவின் ஒரு டீம் ப்ளான் போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்துவிட்டால் தலித் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் ஸ்டாலினுக்கு நெருக்கடியான சூழலை உருவாக்க முடியும் என இபிஎஸ் ஸ்கெச்ட் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இபிஎஸ், திருமா தங்கள் பக்கம் வந்துவிட்டால் வலுவான கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியும் என நினைப்பதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.