VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

Continues below advertisement

ஆதவ் அர்ஜூனா பேசுனது சரியில்ல, விஜய்க்காக இன்று வேலை பார்த்துள்ளார் என போர்க்கொடி தூக்கியுள்ளார் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ். ஏற்கனவே ஆதவ் மீது வீசிக சீனியர்கள் கடுப்பில் உள்ள நேரத்தில் அவரது பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவா அரசியல் விழாவா என பலரும் குழம்பும் அளவுக்கு மேடையில் விஜய்யை வைத்துக் கொண்டே திமுகவை அட்டாக் செய்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா அண்ணன் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால், அவர் மனசாட்சி இங்குதான் இருக்கிறது; 2026 தேர்தலில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும்; பிறப்பால் இனி முதலமைச்சர் தமிழ்நாட்டில் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றால் கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறும் மன்னராட்சியை கேள்வி கேட்டால் என்னை சங்கி என்கிறார்கள் என்று ரவுண்டுகட்டினார்.

அவரது பேச்சு திருமாவளவனுக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.ஆதவ் பேசியது தவறு என விசிகவுக்குள்ளேயே புயல் கிளம்பியுள்ளது. இது நூல் வெளியீட்டு விழா கிடையாது, அரசியல் நிகழ்ச்சி என ஒரே போடாய் போட்டுள்ளார் விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ். இது கண்டிக்கதக்க பேச்சு என்றும், இதற்கு பின்னால் ஒரு அரசியல் கணக்கு உள்ளது என்றும் சொல்லியுள்ளார். மிகவும் முக்கியமாக விஜய்க்கு வேலை பார்ப்பவராக ஆதவ் அர்ஜூனா மாறியிருக்கிறார் என சொல்லியுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று. விசிகவில் முக்கிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஒருவர் விஜய்க்காக வேலை பார்க்கிறார் என அந்தக் கட்சியை சேர்ந்தவரே சொல்லியுள்ளது கட்சிக்குள் நடக்கும் மோதலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.ஆதவ்-க்கு எதிராக திருமா நடவடிக்கை எடுப்பார் என அடித்து சொல்லியுள்ளார் ஆளூர் ஷாநவாஸ். 

ஒருவேளை திருமா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கட்சியில் இருப்பவர்களே எதிர்த்து நிற்கக் கூடிய சூழலும் உருவாகி திருமாவுக்கு நெருக்கடி வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே நான்காண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வர் ஆகும் போது 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட திருமாவளவன் ஏன் துணை முதல்வராக கூடாது என ஆதவ் சொன்னது அரசியல் பக்குவமில்லாத பேச்சு என எம்.பி ரவிக்குமார், விசிக துணை பொதுசெயலாளர் வன்னி அரசு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரம்பத்தில் இருந்தே ஆதவ் மீது விசிக சீனியர்கள் கடுப்பில் இருக்கின்றனர். குறுகிய காலத்திலேயே ஆதவ் அர்ஜூனாவுக்கு துணை பொதுசெயலாளர் பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்பட்டது. தற்போது கட்சியின் முக்கிய முடிவுகளில் அவரது தலையீடு இருப்பதாகவும், விசிக தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் இருக்கிறது என ஆதவ் சீனியர்களிடம் காட்டிக் கொள்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.

விசிக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுகவுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என கட்சி சீனியர்கள் நம்பும் நேரத்தில் ஆதவ்-ன் பேச்சு அதற்கு ஆப்புவைக்கும் வகையில் அமைந்துள்ளதாக விசிகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதில் திருமா எடுக்கப் போகும் நடவடிக்கை கூட்டணியை தாண்டி விசிகவை இரண்டாக உடையாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram