Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
டெல்டா மாவட்டங்களில் அதிமுக இழந்த வாக்குகளை மீண்டும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக வைத்திலிங்கத்தை அதிமுக பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் இபிஎஸ் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர். வைத்திலிங்கத்தை மீண்டும் கட்சிக்குள் அழைத்து வருபவர்களுக்கு ஸ்பெஷல் பரிசு ஒன்று கொடுப்பதாக அசைன்மெண்டை ஒப்படைத்துள்ளாராம் இபிஎஸ்.
2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கமும் நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அதிமுக உரிமை மீட்பு குழுவை உருவாக்கிய ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட சிலருடன் கைகோர்த்தார். ஓபிஎஸ் அணியில் இருந்து எந்த பலனும் கிடைக்காததால் கடுப்பில் இருந்த ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து கழன்று திமுக பக்கம் சாய ஆரம்பித்தனர். மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், வைத்திலிங்கமும் திமுக அல்லது அதிமுக பக்கம் சாயப் போவதாக பேச்சு அடிபட்டது.
இந்தநிலையில் வைத்திலிங்கத்தை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற முடிவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எடுத்துள்ளாராம். ஏற்கனவே வைத்திலிங்கத்துடன் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். மனோஜ் பாண்டியனை அடுத்து வைத்திலிங்கத்தையும் கொண்டு வந்தால் டெல்டா பகுதிகளில் வாக்கு வங்கியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதிமுகவை பலவீனப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும் என கணக்கு போடுள்ளனர். அதற்குள் வைத்திலிங்கத்தை அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என முக்கிய நிர்வாகிகளை வைத்து இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். வைத்திலிங்கத்தை யார் கட்சிக்குள் மீண்டும் கொண்டு வருகிறார்களோ அவருக்கு ஸ்பெஷல் பரிசு ஒன்றும் கிடைக்கும் என இபிஎஸ் ஆஃபர் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் டெல்டா வாக்குகளை குறிவைத்து இபிஎஸ் இந்த மூவ் எடுத்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் முகமாக வலம் வந்தவர் வைத்திலிங்கம். 2001ம் ஆண்டில் இருந்து ஒரத்தநாடு தொகுதி வைத்திலிங்கம் வசம் தான் இருக்கிறது. 2016 தேர்தலில் மட்டும் ஒரத்தநாடு தொகுதி அவரது கைகளில் இருந்து நழுவி சென்றது. 2019 தேர்தலில் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக கைகள் ஓங்கி இருந்தன. அதிமுகவில் விரிசல் விட ஆரம்பித்த பிறகு 2021 தேர்தலில் டெல்டாவில் நிலைமை மாற ஆரம்பித்தது. இந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் டிடிவி தினகரன். அதிமுகவில் இருந்து பிரிந்த பிறகு 2021 தேர்தலில் அமமுக தனியாக களமிறங்கியதால் அதிமுகவின் வாக்குகளை டிடிவி பிரித்ததால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக சில தொகுதிகளை தவறவிட்டது.
இதனையடுத்து வந்த 2024 மக்களவை தேர்தலில் வைத்திலிங்கமும் கட்சியை விட்டு பிரிந்து விட்டதால் அதிமுகவுக்கு டெல்டாவில் வாக்குகள் குறைந்தன. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக வைத்திலிங்கம் செல்வாக்குடன் இருக்கக் கூடிய தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் தேமுதிகவுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியது. அந்த தொகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இபிஎஸ் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.தொடர்ந்து விவசாயிகளின் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது, டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளின் குறைகளை கேட்பது இபிஎஸ்-க்கு கைகொடுத்துள்ளது. அதோடு சேர்த்து வைத்திலிங்கத்தையும் கட்சிக்குள் சேர்த்துவிட்டால் தேர்தல் நேரத்தில் ப்ளஸாக அமையும் என கணக்கு போட்டுள்ளதாக சொல்கின்றனர்.