Udhayanidhi Stalin : உதயநிதியின் ஸ்கெட்ச்!அதிகாரிகள் ‘கப்சிப்’ மதுரையில் சம்பவம்!
உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகளை நடத்தினார். ஆய்வின் போது சில அரசு அலுவலர்களின் தொய்வான நடவடிக்கைகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் 4 அரசு அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல் நிகழ்ச்சியில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசு நலத்திட்ட உதவி வழங்கினார். தொடர்ந்து கலைஞர் நூலகங்கள், தி.மு.க ஐ.டி., விங் அலுவலகங்கள் திறப்பு, மாற்றுத்திறனாளி வீரரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம், படிப்பகத்தில் இளைஞரை சந்திப்பது என ஒரே நாளில் மதுரை முழுவது சுழன்றார். தொடர்ந்து இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டத்திலும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை முடித்தார். மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக ராமநாதபுரம் நிகழ்ச்சியை முடித்து சென்னை செல்கிறார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் நடத்திய ஆய்வில் வருவாய் வட்டாட்சியர் உட்பட 4 அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துள்ளார். இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட வளர்ச்சி மற்றும் அனைத்து திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுகளை நடத்தினார். இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆய்வின்போது சில அரசு அலுவலர்களின் தொய்வான நடவடிக்கைகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் சமையலர் ஆகிய நான்கு பேரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் இரண்டு விடுதி காப்பாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.