“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!
விஜய் நேற்று ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுகவினருக்கும் விஜய் ஆதரவாளருக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த முறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் கிளம்பி சென்றார். சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவதும் மரபு. ஆனால் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்தும் அதனை செய்யாததால் உரையை புறக்கணித்ததாக ஆளுநர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், ”தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என விஜய் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவில் விஜய் பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகனே பொன்விழா கண்டு விட்டார். 1921ல் கென்னெட் சட்டப்பேரவை தொடங்கி வைத்து இத்துடன் 104 ஆண்டுகளாகிறது. அப்படி பார்த்தால் சட்டப்பேரவை தொடங்கி நூற்றாண்டு விழா கண்டுள்ளது. சின்ன தகவல் பிழைகள் கூட வரலாற்றிற்கு செய்யப்படும் பெரும்தீங்கு என்று திமுக ஆதரவாளர்கள் விஜய்-க்கு இது கூட தெரியவில்லை என்று விஜயை சமூக வளைதளங்களில் ரவுண்டு கட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் விஜயின் ஆதரவாளர்கள் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் மரபு கலைஞர் அறிவித்தது நீராரும் கடலுடுத்த பாடலில் வரும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் வரிகளில் வரும் திராவிட என்ற சொல் அண்ணாதுரையை ஈர்த்தது. எனவே அப்பாடலையே அரசுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவிருந்த நிலையில் 1969-இல் அண்ணா இறந்தார். இதன்பிறகு மு. கருணாநிதி முதலமைச்சராகத் பொறுப்பேற்றதையடுத்து, ஆரியம் போலத் தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்று இப்பாடலை 1970 மார்ச்சு 11 அன்று தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது. அதை தான் விஜய் பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்று விஜய் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.