TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

Continues below advertisement

ஆளுநரை கண்டித்துள்ள தவெக தலைவர் விஜய், நேரலை ஒளிபரப்பை நிறுத்துவது தவறு என்றும் அதிமுகவுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். 

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த முறையும் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் கிளம்பி சென்றார். சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியாக தேசிய கீதம் பாடப்படுவதும் மரபு. ஆனால் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்தும் அதனை செய்யாததால் உரையை புறக்கணித்ததாக ஆளுநர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. 

இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், ”தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்பேரவையில் நேரலை துண்டிக்கப்படுவது தொடர்பாகவும் பேசியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முன்வைத்து, அதிமுக எம்எல்ஏக்கள், யார் அந்த சார்? பேட்ஜ் அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியவாறு வந்திருந்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த காட்சிகள் நேரலையில் துண்டிக்கப்பட்டது விமர்சனத்தில் சிக்கியது. இதுபற்றி சபாநாயகர் அப்பாவுவிடம் கேள்வி எழுப்பிய போதி தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என பதில் கொடுத்தார். ஆனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் விவாதம் பெரும்பாலும் காட்டப்படுவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

தற்போது அதே கருத்தை விஜய்யும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், ‘ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram