TVK Vijay Meets Rahul Gandhi: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!

பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ள சூழலில் இந்த தகவல் சூட்டை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுக - பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. மறுபுறம் ஆளும் திமுக தற்போது உள்ள கூட்டணிகட்சிகளோடு தேர்தலை சந்திக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் திமுக கூட்டணியில் இருப்பது குறித்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்ததாக சொல்கின்றனர். 

அதாவது காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்,”திமுக கூட்டணியில் நாம் இருக்கிறோம். ஆனால், அடிமை கிடையாது. காங்கிரசின் வளர்ச்சிக்காக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது நமது உரிமை.  கூட்டணி ஆட்சியை வலியுறுத்துவதும் ஆட்சியில் பங்கு கேட்பதும் எப்படி தவறாகும்? எதற்காக இதைப் பற்றிப்பேசவே பயப்படுகிறீர்கள்?

காங்கிரஸ் கட்சி கோழையா? பேசவே பயப்பட்டால் மக்களை சந்தித்து எப்படி கட்சியை நாம் வளர்க்கமுடியும்? திமுகவில் கூட்டணி ஆட்சியை கேட்கக் கூட பயந்தால் எப்படி? துணிச்சலாக கேட்கவேண்டும். இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை எடுங்கள்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். இதையே கே.ஆர். ராமிசாமியும் பேச திமுக கூட்டணிக்கு ஆதரவாக கே.வி.தங்கபாலு, கே.எஸ். அழகிரி ஆகியோர் பேச காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அனல் பறந்ததாக சொல்கின்றனர்.

இப்படி கூட்டணி குறித்தான பேச்சுகள் காங்கிரஸ் கட்சிகளுக்கு விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேச உள்ளதாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த போது ராகுல் காந்தி தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்தார். அதேபோல், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு விஜய் வாழ்த்து தெரிவித்தார். இதனிடையே விஜயின் அரசியல் வருகைக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் வரவேற்பு அளித்திருந்தனர். காட்சி ஆரம்பித்த போதே கொள்கை எதிரி பாஜக தான் என்று விஜய் பிரகடனம் செய்தார்.

இது காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அப்போதே கூட்டணிக்கு வருவோற்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்தார்.  இந்த நிலையில் தான் கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பேசி வரும் சூழலில் ராகுல் காந்தி மற்றும் விஜய் சந்திப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி அளித்துள்ள பேட்டி ஒன்றில், “2026-ல் திமுக உடன் தான் கூட்டணி என்று இப்போதே சொக்க முடியாது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணிக் கணக்குகள் மாறிய வரலாறு தமிழ் நாட்டில் உண்டு. தவெகவின் வலிமையை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

எங்களது கருத்து தவெக கருத்துடன் ஒத்துப்போகிறது” என்று கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மறுபுறம் இத்தனை ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை இழுத்து பிடித்து வைத்துக்கொள்ள திமுகாவும் தீவிரம் காட்டி வருவதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola