TVK Vijay | ’’20 லட்சம் வேணாம்விஜய் நேர்ல தான் வரணும்’’பணத்தை திருப்பி கொடுத்த பெண்
’’நேர்ல வரேனு சொன்னாரு..ஆனா வரல..எங்களுக்கு ஆறுதல் தான் தேவை பணம் தேவையில்லை’’ என தவெக தலைவர் விஜய் வழங்கிய 20 லட்ச ரூபாய் பணத்தை கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக சார்பில் வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைத்தனர்.உயிரிழந்த குடும்பத்தினரும் விஜய் வீடியோ காலில் பேசும் பொழுது நேரில் உங்களை சந்திப்பேன் என்று கூறியிருந்த நிலையில், நேற்று மாமல்லபுரம் தனியார் சொகுசு விடுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
இதனையடுத்து கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரது குடும்பத்திற்கு நடிகர் விஜய் சார்பில் 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் மாமல்லபுரத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை ஏற்க மறுத்த ரமேஷின் மனைவி சங்கவி இந்த விழாவை புறக்கணித்தார். ஆனால் அவருக்கு பதிலாக இறந்தவரின் அக்கா பூமதி, அவரது கணவர் அர்ஜுனன், உறவினர் பாலு ஆகியோர் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் ரமேஷின் அக்கா குடும்பத்துடன் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், அவர்கள் தனக்கு பதிலாக விஜயை சந்திக்க சென்றதே தனக்கு தெரியாது எனவும் ரமேஷின் மனைவி சங்கவி ஆவேசமடைந்துள்ளார்.
இதனையடுத்து எங்களுக்கு ஆறுதல் தான் வேணும், பணம் தேவையில்லை எனக்கூறி விஜய் நேரில் வராததை சுட்டிக்காட்டி தனது வங்கி கணக்கில் தவெக செலுத்திய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.





















