TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!
தவெகவில் 100 மாவட்ட செயலாளர்கள் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டால் அரசியல் களத்தில் புயலை கிளப்பிய விஜய் அடுத்த மாநாட்டுக்கு ரெடியாகிவிட்டதாக சொல்கின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தலை டார்கெட் வைத்து கட்சி ஆரம்பித்த விஜய், முதற்கட்டமாக கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இறங்கினார். மாநாட்டில் தனது கொள்கைகளை அறிவித்து எதிரிகளை கைகாட்டினாலும், கட்சி ரீதியாக நிர்வாகிகளை பலப்படுத்தாமல் இருந்தது விமர்சனத்தில் சிக்கியது.
அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தவெகவில் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார் விஜய். கட்சி ரீதியாக 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்க உத்தரவிட்டார். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் பதவிதான் மிக முக்கியமானது.
இந்தநிலையில் சென்னை பனையூரில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவிருக்கிறது. நான்கு மாதங்களாக மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வந்த நிலையில், இன்று இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் விக்கிரவாண்டி மாநாட்டின் மூலம் தனது பலத்தை காட்டிய விஜய், அடுத்த மாநாட்டிற்கும் தயாராகி வருவதாக சொல்கின்றனர். நெல்லையில் அடுத்த மாநாடு நடக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தவெக தரப்பில் விசாரித்த போது இன்னும் இடம் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி மாநாட்டில் தனது கொள்கை பற்றியும், அரசியல் எதிரியை கைகாட்டியும் பேசிய விஜய், அடுத்த மாநாட்டை இன்னும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.
அதற்கு முன்பு கட்சி ரீதியான பணிகளை முழுவதுமாக முடித்து வைத்துவிட்டு பெரும் படையுடன் மேடையில் ஏற விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.