கரூர் செல்லும் விஜய்? தவெகவின் 20 பேர் குழு! விஜய் கொடுத்த அசைன்மெண்ட்
கரூர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ள நிலையில் 20 பேர் கொண்ட குழுவை அமைத்து அசென்மெண்ட் ஒன்றை கொடுத்துள்ளார் விஜய்.
கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 உயிரிழந்த சம்பவம் தவெகவின் நிலைமையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினர். ஆனால் கரூர் விவகாரத்தில் தவெகவை வெளுத்தெடுத்த நீதிமன்றம் புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
இந்தநிலையில் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் ஓடியதும் விமர்சனத்தில் சிக்கியது. தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர் என நீதிபதி கண்டித்திருந்தார்.
இந்த நேரத்தில் விஜய் கரூர் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதற்கான பணிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாக உள்ளதால் அவர் இல்லாமலேயே கூட்டங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. அதனால் விஜய்யே மாவட்ட செயலாளர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு மீட்டிங் ஒன்றை நடத்தியதாக சொல்கின்றனர்.
அப்போது 20 பேர் கொண்ட குழு ஒன்றை விஜய் அமைத்துள்ளார். த.வெ.க.விற்கு ஆதரவாக கருத்து பதிவிடுவோரை கைது செய்தால் அவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்கு இந்த குழுவுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக சொல்கின்றனர். கரூர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்குவதற்காகவும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.